காலைத் தியானம் – மே 22, 2021

ஒபதியா 12 – 15 

நீ பெருமையாய் பேசாமலும்            

ஏதோமியர் செய்த குற்றங்களைத் தொடர்ந்து பார்ப்போம். எதிரிகள் இஸ்ரவேலரைக் கைப்பற்றியபோது, ஏதோமியர் மகிழ்ச்சியடைந்தனர். அது மாத்திரமல்ல, உன்னைவிட நான் நல்லவன் என்ற எண்ணம் அவர்களுக்குள் இருந்தது. நம்மிடமும் அப்படிப்பட்ட எண்ணம் இருக்கிறதோ? ஒருவனுக்குத் துன்பம் வந்தால், அவன் செய்த பாவத்திற்கேற்ற தண்டனையைத்தான் அனுபவிக்கிறான் என்ற எண்ணம் நமக்கு வந்திருக்கிறதல்லவா? அந்த எண்ணத்தின் உள்ளான அர்த்தம் என்ன? அவனைவிட நான் நல்லவன்; ஆகையால்தான் எனக்கு அப்படிப்பட்ட துன்பம் வரவில்லை என்ற பெருமை நம்மிடம் இருக்கிறது என்பதுதான் அர்த்தம். ஆண்டவருடைய கிருபையையும் இரக்கத்தையும் நீ சம்பாதித்துவிட்ட சொத்து என்று நினைக்காதே!

ஜெபம்

ஆண்டவரே, நான் பக்தியில் சிறந்தவன் என்ற பெருமை என்னை அணுகாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.