காலைத் தியானம் – மே 27, 2021

யோனா 1: 13 – 17    

அந்த மனுஷர் . . . கர்த்தருக்குப் பலியிட்டு

கப்பலில் பயணம் செய்தவர்கள் அனைவரும் கர்த்தரை அறிந்தவர்கள் அல்ல என்பதைப் பார்த்தோம். கடல் கொந்தளித்தவுடன் ஒவ்வொருவரும் தம் தம் தெய்வத்தை நோக்கி வேண்டினார்கள் என்று 5ம் வசனத்தில் பார்த்தோம். அவர்களெல்லாரும் இப்போது கர்த்தரை வணங்கி, அவருக்குப் பலியிட்டு பொருத்தனைப் பண்ணி ஜெபிக்கிறார்கள்.  அவர்களை மனம் மாறச் செய்தது யோனாவின் பிரசங்கம் அல்ல. யோனாவின் கீழ்ப்படியாமையையும் அதன் விளைவாக உருவான கடல் கொந்தளிப்பையும் குறித்து அவர்கள் யோனாவின் வாக்குமூலம் வழியாகத் தெரிந்துகொண்டார்கள். யோனாவைக் கடலில் தூக்கிப் போட்டவுடன் கடல் அமைதியானதை அனுபவத்தின் மூலம் அறிந்துகொண்டார்கள். கர்த்தருடைய வல்லமையை உணர்ந்தார்கள். அதுவே அவர்களுடைய மன மாற்றத்திற்கான காரணம். கர்த்தர் ஒவ்வொருவருடனும் ஒவ்வொரு விதமாகப் பேசுகிறார். மனிதனின் மனதை மாற்றுகிறவர் கர்த்தர் ஒருவரே.

ஜெபம்

ஆண்டவரே, நான் விதைகளை விதைக்கிறேன். நீரே அவைகளை முளைக்கச் செய்யும். ஆமென்.