காலைத் தியானம் – ஜூன் 01, 2021

மீகா 1: 1 – 2    

ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார்

                              மீகா தீர்க்கதரிசி கி.மு. 750ஆம் ஆண்டுக்கும் கி.மு. 686ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களைப் பெற்றார். சாலொமோன் ராஜாவின் காலத்திற்குப் பிறகு, ரெகொபெயாம் ராஜாவின் நாட்களில் இஸ்ரவேல் ராஜ்ஜியம் இரண்டாக உடைந்தது  என்பதை 1 இராஜாக்கள் 12ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். வடக்கில் சமாரியாவைத் தலைநகராகக் கொண்டு, யூதா பென்யமீன் ஆகிய கோத்திரத்தாரைத் தவிர மற்ற பத்து கோத்திரத்தார் அடங்கிய இஸ்ரவேல் என்ற நாடு உருவாகியது. தெற்கில் எருசலேமைத் தலைநகராகக் கொண்டு, யூதா பென்யமீன் கோத்திரத்தார் அடங்கிய யூதா என்ற நாடு உருவாகியது. மீகா தீர்க்கதரிசனம் பெற்ற நாட்களில் யூதா மிகவும் செழிப்புடன் இருந்துவந்தது. ஆனால் மக்களின் பாவமோ ஆண்டவரைத் துக்கத்தில் ஆழ்த்தியது. நீ தொடர்ந்து அனுபவித்துவரும் வசதியான வாழ்க்கை உனக்கு ஆண்டவர் கொடுத்துள்ள ஆசீர்வாதமாக இருக்கலாம். ஆனால் நீ சிந்தையாலும் செயலாலும் செய்யும் பாவங்கள் அனைத்தும் உன் ஆண்டவருக்கு விரோதமாகச் செய்யப்படும் பாவங்கள் என்பதை மறந்துவிடாதே. ஆண்டவருடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.                             

ஜெபம்

ஆண்டவரே, நீர் எனக்கு இவ்வுலகில் கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்கள் என்னை உம்மிடமிருந்து பிரித்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும்.  ஆமென்.