காலைத் தியானம் – ஜூன் 10, 2021

மீகா 4:1 – 5    

அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்

கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. யூதாவும் இஸ்ரவேலும்  வசதியாகவும் எதிரிகளின் பிரச்சனைகள் எதுவும் இல்லாமலும் வாழ்ந்த நாட்களில், மீகா அவர்களுக்கு வரப்போகும் அழிவைக் குறித்துத் தீர்க்கதரிசனம் சொன்னார். அது நிறைவேறியது என்பதை வேதத்திலும் சரித்திரப் புத்தகங்களிலும் பார்க்கிறோம். அது அன்று நடக்கச் சாத்தியமில்லாத ஒரு காரியமாகத்தான் அநேகருக்குத் தோன்றியிருக்கும். இன்று உலகின் எல்லா திசைகளிலும் போர், யுத்தம், உள் நாட்டு கலவரம், பயங்கரவாதம் ஆகியவற்றைப் பார்க்கிறோம். இவைகள் இல்லாத சமாதான நாட்களை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.  ஆனால் கர்த்தர் சொல்லியிருக்கிறபடி சமாதான நாட்கள் நிச்சயமாக வரும். அந்நாட்களிலும் கூட கர்த்தரைப் பற்றிக் கொள்ளாமல் வேறே தெய்வங்களையும் விக்கிரகங்களையும் ஆராதிப்பவர்கள் இருப்பார்கள் (வசனம் 5). இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் எதிர்காலத்தை அறிந்துகொள்வதற்கு நமக்கு இருக்கும் ஆசையைத் திருப்தி செய்யும்படி கொடுக்கப்படவில்லை. வருகிற நாட்களில் நடக்கப்போகும் முக்கிய காரியங்களை அறிந்துகொண்டு இந்நாட்களில் எப்படி ஜெபிக்கவேண்டும் என்பதற்காகவும் எப்படி வாழவேண்டும் என்பதற்காகவுமே கொடுக்கப்பட்டிருக்கிறது.                                                                                                                        

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதை விசுவாசிக்கிறேன். என் வாழ்க்கை அந்த விசுவாசத்தை வெளிப்படுத்துவதாக. ஆமென்.