காலைத் தியானம் – ஜூன் 14, 2021

மீகா 6:1 – 8    

நியாயம் . . .இரக்கம் . . .மனத்தாழ்மை           

நம்முடைய சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும், கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கும் மூன்று காரியங்களைக் குறித்து மீகா தீர்க்கதரிசி சொல்லுகிறார். நாம் நியாயத்தைச் செய்யவேண்டும். இரக்கத்தை சிநேகிக்கவேண்டும். மனத்தாழ்மையுடன் நடக்கவேண்டும். ஒருவேளை நாம் அநியாயம் செய்யாமல் இருக்கலாம். அது மாத்திரம் போதாது. அநியாயங்கள் நடக்கும்போது அவற்றை எதிர்த்து குரல் கொடுத்து, குறிப்பாக ஏழைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் நியாயம் கிடைக்க பாடுபடவேண்டும்.  தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதே நியாயம் என்ற நிலை இருந்தாலும், அவர்கள் மனந்திரும்பும்போது அவர்களுக்கு இரக்கம் காட்ட தயங்கக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக நம்மிடம் பெருமை சிறிதளவும் இல்லாமல் எப்பொழுதும் மனத்தாழ்மை காணப்படவேண்டும். கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் இல்லாமல், நம் சொந்த முயற்சியினால், செல்வத்தினால், செல்வாக்கினால், உடல் பெலத்தினால், அறிவினால், ஞானத்தினால், அனுபவத்தினால் ஒன்றையும் சாதிக்கமுடியாது என்று எப்பொழுது உணர்ந்து செயல்படுகிறோமோ அப்போதுதான் உண்மையான மனத்தாழ்மை நம்மிடம் காணப்படும்.                                                                                                                     

ஜெபம்:

ஆண்டவரே, இன்று தியானித்த மூன்று நற்குணங்களும் என்னில் வளர எனக்கு உதவி செய்யும். ஆமென்.