காலைத் தியானம் – ஜூன் 17, 2021

மீகா 7:8 – 20    

நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்                             

விழாத கிறிஸ்தவ வாழ்க்கையே சிறந்தது. ஆதியிலிருந்த அன்பை விட்டுவிடாமல் இருப்பதுதான் சிறந்தது (வெளி 2: 4). ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, வாழ்க்கையில் விழுந்துவிட்டவர்களுக்கு இரண்டாவது தருணத்தைக் கொடுக்கும் இரக்கமுள்ளவர். அன்பு மிகுந்தவர். ஆனால் கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் நாம் மறுபடியும் மறுபடியும் விழுந்துகொண்டே இருப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் உரிமை (அல்லது licence) அல்ல (ரோமர் 6: 1).  ஒருவேளை நீ விழுந்துவிட்டால் விழுந்த நிலையிலேயே இருந்துவிடக் கூடாது. எழுந்து விடவேண்டும். அதற்கு முதலாவதாக, நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன் (வசனம் 9) என்பதை உணர்ந்து மனந்திரும்பவேண்டும்.  இரண்டாவதாக, நம்முடைய கர்த்தர் மீறுதல்களை மன்னிக்கிறவர் (வசனம் 18) என்பதை விசுவாசித்து அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். மூன்றாவதாக, எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் புறப்பட்ட நாட்களில் செய்ததைப் போன்ற அதிசயங்களை அவர் நம் வாழ்க்கையிலும் செய்ய வல்லவராயும் விருப்பமுள்ளவராயும் இருக்கிறார் (வசனம் 15) என்பதை உணர்ந்து கர்த்தருடைய வல்லமையையே நம்பி வாழ வேண்டும்.                                                                                                                   

ஜெபம்:

ஆண்டவரே,  இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையின் மூலமாக நான் படித்துக் கொண்ட அநேகப் பாடங்களுக்காக நன்றி சுவாமி.  ஆமென்.