ஆபகூக் 1: 1 – 4
கர்த்தாவே நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்?
ஆபகூக் தீர்க்கதரிசியின் புத்தகம் கி.மு. 612ம் ஆண்டிற்கும் கி.மு. 588ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. இதுவரை நாம் வாசித்த பல தீர்க்கதரிசன புத்தகங்களிலும் கர்த்தர் சொல்லும் வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்த்தோம். ஆபகூக் புத்தகத்தில், தீர்க்கதரிசி கர்த்தரிடம் கேட்ட கேள்விகளையும் அதற்கு அவருக்குக் கிடைத்த பதில்களையும் வாசிக்கிறோம். நமது மனதில் தோன்றும் கேள்விகளைக் கர்த்தர் முன் வைப்பதில் எந்த தவறும் இல்லை என்பதை இந்த புத்தகத்தின் மூலமாக அறிந்துகொள்ளுகிறோம். ஆண்டவரே ஏன் அமைதியாயிருக்கிறீர்? இன்னும் எவ்வளவு காலம் நான் காத்திருக்கவேண்டும்? உமக்குப் பயந்தவர்கள் பலர் வறுமையில் வாடும்போது தீயவர்கள் ஏன் செல்வத்துடன் வாழ்கிறார்கள்? மோசே, சாமுவேல் போன்ற மனிதர்களுடன் நீர் நேருக்கு நேர் பேசியதுபோல ஏன் என்னுடன் பேசுகிறதில்லை? உன் கேள்விகள் அனைத்தையும் கர்த்தரின் பாதத்தில் கொட்டிவிடு. உனக்கும் பதில் கிடைக்கும்.
ஜெபம்:
ஆண்டவரே, என் மனதிலுள்ள பலவித கேள்விகளை நீர் அறிவீர். நீரே எனக்கும் பதில்களைத் தாரும். ஆமென்.