ஆபகூக் 1: 5 – 11
விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியை
நம்முடைய நினைவுகளும் கர்த்தருடைய நினைவுகளும் மிகவும் வேறுப்பட்டவை. பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே நம்முடய நினைவுகளையும் வழிகளையும்விட கர்த்தருடைய நினைவுகளும் வழிகளும் உயர்ந்திருக்கின்றன (ஏசாயா 55: 8, 9). ஆகையால்தான் அவர் நம்முடைய வாழ்க்கையில் செய்யப்போவதை இன்று நமக்கு விவரித்துச் சொன்னாலும் நாம் அவற்றை நம்பப் போவதில்லை என்று சொல்லுகிறார். இன்னொரு விதமாகச் சொன்னால், நாம் கர்த்தரை நம்முடைய சிந்தனையின்படியும் நம்முடைய காலகட்டத்தின்படியும் அறிந்துகொள்ள முயற்சிக்கிறோம். அது முடியாத காரியம். செழிப்புடன் இருந்த யூதா அடிமை நாடாக மாறிவிடும் என்பதும், உலக வல்லரசாக இருந்த எகிப்து திடீரென்று தன் வல்லமையை இழந்து ஒடுக்கப்படும் என்பதும், அசீரியா நாடு அழிக்கப்படும் என்பதும், பாபிலோன் நாடு வல்லரசாக உருவாகும் என்பதும் ஆபகூக் தீர்க்கதரிசியின் நாட்களில் கர்த்தர் முடிவு செய்திருந்த “நம்ப முடியாத, பிரமிக்கத்தக்க” கிரியைகள்.
ஜெபம்:
ஆண்டவரே, உம்முடைய பிரமிக்கத்தக்கத் திட்டங்களுக்காகக் காத்திருக்கும் பொறுமையை எனக்குத் தாரும். ஆமென்.