ஆபகூக் 3: 11 – 19
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும் . . . . கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
பவுல் அப்போஸ்தலன் இதை வாழ்ந்து காட்டினார். கைகளையும் கால்களையும் கட்டி சிறையிலடைத்திருந்த நேரத்திலும் அவர் கர்த்தரை மகிழ்ச்சியோடு துதித்துக் கொண்டிருந்தார். நமக்கு ஒரு சிறு துன்பம் வந்துவிட்டால் கூட நாம் அதிகக் கவலைப்பட்டு மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளுகிறோம். அந்த நிலையில் எப்படி கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கமுடியும்? இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றபடி இந்த வசனத்தின் பொருளைச் சொல்லவேண்டுமானால் இப்படி சொல்ல வேண்டும். நான் வேலையை இழந்து வருமானம் இல்லாமல் இருந்தாலும், நான் சம்பாதித்துவைத்த நிலத்தையும் வீட்டையும் இழந்தாலும், பணமே இல்லை என்ற நிலை வந்தாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன். நாம் இப்படி சொல்ல முடியுமா? மேலும் நமக்கு அருமையானவர்களை இழந்து வேதனைப்படுகிற நாட்களில்கூட கர்த்தரோடு நெருங்கி உறவாடி, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்க முடியுமா? துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டிருக்கும் நாட்களில் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பது எளிதல்ல. பரிசுத்த ஆவியானவர் தாமே நமக்கு ஆறுதல் தந்து கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்க உதவி செய்வாராக.
ஜெபம்:
ஆண்டவரே, ஆபகூக் தீர்க்கதரிசி, பவுல் அப்போஸ்தலன் போன்ற உம்முடைய தாசர்களைப் போல நானும் எல்லா சூழ்நிலைகளிலும் உம்மில் மகிழ்ந்திருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.