செப் 1: 1- 10
கர்த்தரின் பேரில் ஆணையிட்டு, மல்காமின் பேரிலும் ஆணையிட்டு
செப்பனியா தீர்க்கதரிசியின் புத்தகம் கி.மு. 630ம் ஆண்டளவில் எழுதப்பட்டது என்று வேத ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். செப்பனியா, எஸ்கியா ராஜாவின் பரம்பரையில் நான்கு தலைமுறைகளுக்குப் பின் வந்தவர். யோசியா ராஜாவின் காலத்தில் யூதா மக்களை எச்சரிக்கும்படி மற்ற தீர்க்கதரிசிகளைப் போலவே வரப்போகும் அழிவைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறியவர். யூதா நாட்டில் வாழ்ந்துவந்த இஸ்ரவேலின் புத்திரர், பல தெய்வங்களை வழிபடும் பழக்கத்தில் இருந்தார்கள். கர்த்தரையும் வணங்கினார்கள். அம்மோனியர் தொழுதுவந்த மல்காமினையும் வணங்கினார்கள். கர்த்தர் உருவாக்கிய வான சேனையாகிய சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் வணங்கினார்கள். இது கர்த்தருக்கு அருவருப்பான காரியம். கர்த்தரையும் ஆராதித்துக்கொண்டு நல்ல நாள், நல்ல நேரம் என்று பார்ப்பது கர்த்தர் வெறுக்கும் காரியம். கர்த்தரை மாத்திரம் வணன்குகிறேன் என்று சொல்லிக்கொண்டு திருமணம் ஒழுங்கு செய்யும்போது நகை, பணம் போன்றவை வரதட்சணையாகக் கைமாறுவது கர்த்தருக்கு அருவருப்பான காரியம். ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைக்காதே.
ஜெபம்:
ஆண்டவரே, ஆபகூக் தீர்க்கதரிசி, பவுல் அப்போஸ்தலன் போன்ற உம்முடைய தாசர்களைப் போல ஆண்டவரே, செப்பனியா தீர்க்கதரிசியின் நாட்களில் இருந்ததுபோல நாங்கள் இரட்டை வாழ்க்கை வாழாதபடி எங்களைக் காத்து வழிநடத்தும். ஆமென்.