காலைத் தியானம் – ஜூலை 19, 2021

சகரியா 4: 1 – 6       

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல                    

                             நாம் நம்முடைய சுய பலத்தினால் ஒன்றையும் சாதித்துவிட முடியாது. அதை நம்முடைய அனுபவத்தின் மூலமாகவும் கற்றுக் கொள்ளலாம்; அல்லது பிறருடைய அனுபவத்திலிருந்தும் கற்றுக் கொள்ளலாம். நாம் இந்த உண்மையை உணர்ந்துகொண்டால், மனத்தாழ்மை நமக்கு வந்துவிடும். மனத்தாழ்மை என்பது ஒரு சில (அடக்கமான) வார்த்தைகளை உபயோகிப்பதினால் வந்துவிடுவது இல்லை. அழிக்கப்பட்ட எருசலேம் தேவாலயத்தை மறுபடியும் கட்டும்படி கோரேஸ் ராஜாவின் நாட்களில் வேலை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் உடனேயே எதிர்ப்பு உருவாகி கட்டிட வேலை நிறுத்தப்பட்டது. 15 ஆண்டுகளாக ஒரு முன்னேற்றமும் இல்லை. இதைக் குறித்து எஸ்றா மூன்றாம் நான்காம் அதிகாரங்களில் வாசிக்கலாம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு தரியு ராஜாவின் ஆட்சி காலத்தில், செருபாபேல் மூலமாக கர்த்தர் ஆலயம் கட்டுகிற வேலையை மீண்டும் தொடங்குகிறார். கர்த்தர், “செருபாபேலே, உன் சொந்த பலத்தினால் உன்னால் ஒன்றும் செய்யமுடியாது. பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு செயல்பட்டால் மாத்திரமே இந்த ஆலயத்தைக் கட்டிமுடிக்க முடியும்” என்று ஆலோசனை சொல்லுகிறார். கடந்த நாட்களில் என்னால் இதைச் சாதிக்க முடியவில்லையே என்று நீ எதைக் குறித்தாவது வருத்தப்பட்டதுண்டானால், பரிசுத்தாவியானவரின் உதவியைத் தேடு. உன் சுய பலத்தினால் அல்லது அறிவினால் அல்லது திறமையினால் அல்லது மன உறுதியினால் ஒன்றையும் சாதிக்க முடியாது.             

ஜெபம்:

ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்துள்ள பலத்தின் மீதும் திறமைகளின் மீதும் நம்பிக்கை வைக்காமல், அவற்றைக் கொடுத்துள்ள உம்மையே நம்பி வாழ உதவி செய்யும். ஆமென்.