காலைத் தியானம் – ஆகஸ்ட் 07, 2021

சகரியா 11: 1 – 3      

யோர்தானின் பெருமை அழிந்துபோனபடியால்          

                            பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் நாட்டு மக்கள், தங்கள் உயர்வுக்கு கடின உழைப்பும் நல்ல கொள்கைகளுமே காரணம் என்று நினைக்கின்றனர். ஒருவிதமான பெருமையும் அகங்காரமும் அவர்களுக்கு வந்துவிடுகிறது. ஆண்டவரைப் புறக்கணித்துவிடுகின்றனர். அப்படிப்பட்ட நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்களுடைய ராணுவ பலத்தாலும், பொருளாதார பலத்தாலும் உலகத்தையே தங்கள் கைகளுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து செயல்படுகின்றனர். இந்த மனநிலையை நாடுகள் அளவில் மாத்திரமல்லாமல் தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம். ஒருவேளை நீ பொருளாதார அடிப்படையில் நல்ல நிலையில் இருந்தால், ஆண்டவரே உன்னை அந்நிலையில் வைத்திருக்கிறார் என்பதை முதலாவது உணர்ந்துகொள். இரண்டாவதாக ஆண்டவர் உன் பணத்தையும் செல்வாக்கையும் வைத்து நீ என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறார் என்பதை அறிந்து செயல்படு. பெருமையை உன் பக்கம் வரவிடாதே. உலகப் புகழ் பெற்ற, உறுதியான லீபனோனின் கேதுரு மரங்களே அழிந்துபோகக் கூடும் என்றால், உன் நிலை எம்மாத்திரம் என்பதை யோசித்துப் பார்.                           

ஜெபம்:

ஆண்டவரே, இந்த நிலையற்ற வாழ்வில் நீர் கொடுத்திருக்கும் பணத்தையும் பதவியையும் நீர் விரும்பும் விதத்தில் உபயோகிக்க எனக்குக் கிருபை தாரும். ஆமென்.