சகரியா 11: 4 – 6
கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்களானோம்
பொருளாதார ஆசீர்வாதத்திற்கு கர்த்தரைத் துதிப்பது மிகவும் நல்லது. ஆனால் தவறான வருமானத்தைக் கர்த்தர் முன் வைத்து அவரைத் துதித்து விட்டால் அந்த வருமானம் தூய்மையாகிவிடுமா? மந்தையைப் பராமரிக்கும்படி ஒருவருக்குப் பொறுப்பு கொடுக்கப்பட்டால், அந்த மந்தையை விற்று பணமாக்குவது எப்படி சரியான வருமானமாகும்? திருமணத்தை நிச்சயிக்கும் நிகழ்ச்சியில் பெண்வீட்டாரிடமிருந்து மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணைப் பணத்தை, போதகர் முன்னிலையில் ஜெபித்து வாங்குவதைப் பார்த்திருக்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சொல்லுவது எப்படி இந்த அவலட்சணத்தை பரிசுத்தமாக்கும்? இந்த தவறான பழக்கம் இன்னும் உன் குடும்பத்தில் தொடருகிறதோ? வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சமுதாயத்துக்கு விரோதமான செயல் மாத்திரமல்ல, அது நமது நாட்டின் சட்டத்திற்கும் விரோதமான செயல் என்பதை உணருகிறோமா? லஞ்சம் வாங்குவதில் தசமபாகத்தைக் காணிக்கையாகக் கொடுத்துவிட்டால் கர்த்தர் லஞ்சம் வாங்குவதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா?
ஜெபம்:
ஆண்டவரே, நீர் கொடுத்திருக்கும் பொறுப்புகளையும் சூழ்நிலைகளையும் தவறான வழிகளில் உபயோகிக்காதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.