காலைத் தியானம் – ஆகஸ்ட் 09, 2021

சகரியா 11: 7 – 13

மத்தேயு 27: 3 – 10

யாத் 21: 32      

எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்

                            இன்று கொடுக்கப்பட்டுள்ள மூன்று வேதபகுதிகளையும் வாசித்து அவைகளிலுள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் கவனியுங்கள். முப்பது வெள்ளிக்காசை வாங்கிக்கொண்டு யூதாஸ் இயேசுவுக்கு துரோகம் செய்தான் என்பதை நாம் அறிவோம். இன்று சகரியா 11ம் அதிகாரத்தில் வாசித்த வசனங்களில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின்போது நடக்க வேண்டிய நிகழ்ச்சிகளின் முன்னோடியாக சகரியாவின் மூலமாக உரைக்கப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகளைப் பார்க்கிறோம். சகரியாவில் சொல்லப்பட்டிருப்பது ஒரு மேய்ப்பனின் ”மதிப்பு”. மத்தேயுவில் சொல்லப்பட்டிருப்பது, “நானே நல்ல மேய்ப்பன்” என்று சொன்ன இயேசுவின் “மதிப்பு”! இரண்டும் முப்பது வெள்ளிக்காசுதான்.  யாத்திராகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் முப்பது சேக்கல் வெள்ளி, மாடு முட்டி கோரமாக்கப்படும் அடிமைக்காகக் கொடுக்கப்பட வேண்டிய நஷ்ட ஈடு. மத்தேயுவில் சொல்லப்பட்டிருப்பது அடிமையின் உருவெடுத்த நமது ஆண்டவராகிய இயேசுவுக்காகக் கொடுக்கப்பட்ட “ஈடு”. “முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்” என்ற தீர்க்கதரிசன வசனத்தை சகரியா 11:13ல் பார்க்கிறோம். மத்தேயு 27: 5-7 வசனங்களில் யூதாஸ் முப்பது வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டான் என்பதையும், பிரதான ஆசாரியர்கள் அந்த பணத்தை வைத்து அந்நியரை அடக்கம் பண்ணுவதற்கு, குயவனுடைய நிலத்தை வாங்கினார்கள் என்பதையும் பார்க்கிறோம். இயேசுவை சிலுவையில் அறைந்தவர்களுக்கு அவருடைய மதிப்பு முப்பது வெள்ளிக்காசுதான். உனக்கு அவருடைய மதிப்பு என்ன என்பது நீ அவருக்காக எப்படிப்பட்ட தியாகங்களைச் செய்ய தயாராக இருக்கிறாய் என்பதைப் பொறுத்ததுதான்.                       

ஜெபம்:

ஆண்டவரே, நான் என் உயிரையே கொடுத்தாலும் அது உம் அன்புக்கு ஈடாகாது. நீர் விரும்புகிறபடி என் முழு உள்ளத்தோடும் முழு பெலத்தோடும் உம்மிடம் அன்புகூர எனக்கு உதவிசெய்யும். ஆமென்.