சகரியா 12: 10 – 14
கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்
இகிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்கு 50 நாட்களுக்குப் பின் பெந்தேகோஸ்தே நாளில், பரிசுத்தாவியானவரின் அபிஷேகம் சீஷர்களுக்குக் கிடைத்தது. அது கிருபையின் ஆவி. கிருபையின் ஆவி நம்மைக் கர்த்தரிடம் திரும்பச் செய்கின்றது. கர்த்தருடைய நீதியையும், நியாயத்தையும், அவருடைய பரிசுத்தத்தையும் நமக்கு வெளிப்படுத்துகிறது. அது மாத்திரமல்ல, கர்த்தருடைய வல்லமையை மனிதரின் மேல் ஊற்றுகிறது. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை மனிதன் சம்பாதிக்கமுடியாது. அது கர்த்தருடைய சுத்த கிருபையினால் மனிதரின் மேல் ஊற்றப்படுகிறது. நாம் ஏற்கனவே தியானித்திருக்கிறபடி, நாம் ஆண்டவருடன் உரையாடுவதை சாத்தான் விரும்புகிறதில்லை. ஏதாவது தடங்கலை அனுப்பிக் கொண்டேயிருப்பான். அதுதான் விண்ணப்பத்தைத் தடை செய்யும் அசுத்த ஆவி. நாம் ஆண்டவரோடு பேசிக்கொண்டேயிருப்பதற்கு விண்ணப்பங்களின் ஆவியை பரிசுத்த ஆவியானவர் ஊற்ற வேண்டும். விண்ணப்பங்களின் ஆவியைப் பெற்றவர்கள் ஆவியோடும் உண்மையோடும் கர்த்தரிடம் பல மணி நேரம் பேசிக்கொண்டேயிருக்க முடிகிறது. விண்ணப்பங்களின் ஆவியைப் பெறாதவர்களுக்கு 10 நிமிட ஜெபமே பெரிய சுமையாக இருக்கிறது.
ஜெபம்:
ஆண்டவரே, என் மீது உமது கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றும். ஆமென்.