சகரியா 14: 1 – 9
அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார். அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்
எல்லா ஆறுகளும் எங்கெங்கே ஓடினாலும், எப்படி ஒரே சமுத்திரத்திலே போய் சேருகின்றனவோ, அப்படியே எல்லா மதங்களும் மக்களை மோட்சத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடும் என்பது நம் நாட்டில் பலரும் நம்பி வரும் ஒரு தத்துவம். அதே போல, நாமெல்லாரும் வணங்குவது ஒரே கடவுள்தான்; வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கிறோம், அவ்வளவுதான் என்று சொல்பவர்களும் உண்டு. பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் இரண்டு கருத்துக்களுமே தவறுதான். முதலாவதாக எந்த மதமும் நம்மை மோட்சத்துக்கு அழைத்துச் செல்லாது. கர்த்தர் இருக்கும் மகா பரிசுத்த இடம்தான் மோட்சம். பாவங்கள் மன்னிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பரிசுத்தமாய் வாழ்கிறவர்கள் மாத்திரமே அந்த பரிசுத்த மோட்சத்திற்கு செல்லமுடியும். கர்த்தர் பத்து கற்பனைகளைக் கொடுக்கும்போதே மிகத் தெளிவாக என்னையன்றி உனக்கு வேறே தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம். என்று சொல்லியிருக்கிறார். நாம் எப்படி எல்லா தெய்வங்களும் ஒன்றுதான் என்று நினைக்கமுடியும்? இன்று வாசித்த வேதாகம பகுதியில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்துப் பார்க்கிறோம். இரண்டாம் வருகையின் போது கர்த்தரே சர்வவல்லமையுள்ள தேவன் என்று எல்லாருக்கும் தெரியும். வேறே பெயர்கள் எதுவும் இருக்காது.
ஜெபம்:
ஆண்டவரே, உம்முடைய இரண்டாம் வருகைக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். சீக்கிரம் வாரும். ஆமென்.