காலைத் தியானம் – ஆகஸ்ட் 23, 2021

மல்கியா 3: 8 – 18     

மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா?                          

                            கர்த்தருடைய ஊழியத்துக்கென்று தசமபாகம் கொடுக்கும் ஒழுக்கத்தை மோசேயின் நாட்களில் கர்த்தர் ஏற்படுத்தினார். லேவியர் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை செய்யும்படி அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள். அவர்கள் முழு நேரத்தையும் கர்த்தருடைய சேவையில் உபயோகிக்கவேண்டும் என்பதால் இஸ்ரவேலின் மற்ற கோத்திரங்களுக்கு நிலம் பகிர்ந்து கொடுக்கப்படும்போது லேவியருக்கு நிலம் கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக தசமபாகத்திலும் காணிக்கைகளிலும் ஒரு பகுதி லேவியருக்குக் கொடுக்கப்பட்டது. மல்கியாவின் காலத்தில் மக்கள் ஒழுங்காக தசமபாகத்தையும் காணிக்கைகளையும் கொடுக்கவில்லை. இதனால் கர்த்தருடைய ஆலயத்தின் சேவை பாதிக்கப்ப்பட்டது. நாமும் நம்முடைய ஆலயத்திலும் மற்ற ஊழியங்களில் சேவை செய்கிறவர்களின் பொருளாதாரத் தேவைகளைச் சந்திக்கும்படி, தசம பாகத்தையும் காணிக்கைகளையும் கொடுக்க வேண்டும். அது நம்முடைய கடமை. உன் ஆலயத்தில் சேவை செய்கிறவர்களின் சம்பளம் இன்றைய விலைவாசிக்கேற்றபடி உயர்ந்திருக்கிறதா?

ஜெபம்:

ஆண்டவரே, தசம பாகத்தையும் காணிக்கைகளையும் சரியானபடி கொடுக்கும் ஒழுக்கத்தை எனக்குத் தாரும். ஆமென்.