காலைத் தியானம் – செப்டம்பர் 01, 2021

சங் 7: 8 – 17             

தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்                       

                            அன்பும் இரக்கமும் நிறைந்த கர்த்தர் எப்படி மனிதனை நரகத்துக்குத் தள்ளமுடியும் என்று அநேகர் கேட்கிறதுண்டு. அதற்கு சரியான பதில், கர்த்தர் ஒருவரையும் நரகத்துக்குத் தள்ளுவதில்லை; மனிதனே தன் சுயவிருப்பத்தின்படி நரகத்தைத் தெரிந்து கொள்ளுகிறான் என்பதுதான். குழியை வெட்டாதே என்று கர்த்தர் சொல்லுகிறார். மனிதரில் பலரோ தங்களுடைய சுயநலனுக்காக, சுய இன்பத்துக்காக செயல்படுகிறதாக நினைத்து பிறருக்கு விரோதமாகக் குழி வெட்டுகிறார்கள். பின்பு அந்தக் குழியில் அவர்களே விழுகிறார்கள். சவுல் ராஜா தாவீதைப் பட்டயத்தால் கொல்லும்படி விரட்டிக்கொண்டே இருந்தான். கடைசியில் தன் பட்டயத்தின் மீதே விழுந்து மரித்தான் (1சாமுவேல் 31:4).  பார்வோன் இஸ்ரவேலரின் ஆண்குழந்தைகளையெல்லாம் கொல்லும்படி அவர்களை நைல் நதியிலே போட்டு மூழ்கடிக்கவேண்டும் என்று கட்டளையிட்டான் (யாத் 1: 22).  பல ஆண்டுகளுக்குப் பின் பார்வோனும் அவனுடைய படை வீரரும் செங்கடலிலே மூழ்கி மரித்தார்கள். மொர்தெகாயைக் கொல்லும்படி ஆமோன் ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமோனே தூக்கிலிடப்பட்டான் (எஸ்தர் 7: 10). கர்த்தருக்கு விரோதமாகவும், பிறருக்கு விரோதமாகவும் பாவம் செய்யாதே.

ஜெபம்:

ஆண்டவரே, நான் யாருக்கு விரோதமாகவும் பாவம் செய்துவிடாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.