காலைத் தியானம் – செப்டம்பர் 02, 2021

சங் 8: 1 – 9             

சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்  

                            கர்த்தருடைய படைப்புகள் அனைத்தையும் கவனியுங்கள்.  வானம், பூமி, கடல், காற்று, மரங்கள், காடுகள், பல விதமான மிருகங்கள், பறவைகள், கடலில் வாழும் உயிரினங்கள், இன்னும் மனிதன் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கும் எண்ணற்ற நட்சத்திரங்கள், விண்மீன்கள் இவைகளையெல்லாம் பார்க்கும்போது கர்த்தருடைய படைப்புகள் எவ்வளவு பிரமாண்டமானவை என்று பிரமிக்காமல் இருக்க முடியவில்லை அல்லவா? இவற்றையெல்லாம் பார்க்கும்போது மனிதன் உருவத்தில் மிகவும் சிறியவன். ஆனால் கர்த்தர் மனிதனுக்கு அறிவையும் ஆற்றலையும் அதிகமாகக் கொடுத்து, எல்லாவற்றிற்கும் மேலாக அவனைத் தம்முடைய சாயலில் உருவாக்கியுள்ளார்.  அது மாத்திரமல்ல, பூமியையும், ச்கல விதமான படைப்புகளையும் மனிதன் ஆளக்கடவன் என்று அவனுக்கு அதிகாரம் கொடுத்தார் (ஆதி 1:26; சங் 8: 6).  அப்படிப்பட்ட அதிகாரத்தை உபயோகிக்கத் தெரியாமல், கர்த்தருடைய பிரதிநிதி என்பதை நிலைநாட்டாமல், நாம் ஏன் வெற்றியில்லாத வாழ்க்கை வாழ்கிறோம்? ஏனென்றால், ஆதாம் ஏவாள் முதல் நாம் அனைவரும் கர்த்தர் கொடுத்த அதிகாரத்தைத் தூக்கி சாத்தானிடம் கொடுத்துவிட்டோம். அவனை இந்த உலகத்தின் அதிபதியாக்கி விட்டோம் (யோவான் 12:31;  14:30; 16:11; 2 கொரி 4:4;  எபே 2:2). அப்பாலே போ சாத்தானே என்று சொல்லத்தெரிந்தவர்கள் மாத்திரமே கர்த்தர் மனிதனுக்குக் கொடுத்த அதிகாரத்தை முழுமையாக உபயோகிக்க முடியும்.

ஜெபம்:

ஆண்டவரே, வெற்றியுள்ள வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.