காலைத் தியானம் – செப்டம்பர் 03, 2021

சங் 9: 1 – 10             

கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை

                            நாம் 9வது வசனத்தையும் 10வது வசனத்தையும் சேர்த்து தியானிக்கவேண்டும். தாவீது ராஜா கர்த்தரைத் தன்னுடைய அடைக்கலம், தஞ்சம் என்று வர்ணிக்கிறார்.  கர்த்தர் எல்லா மனிதருக்கும் தேவன் என்பது சரியென்றாலும், அவரைத் தேடுகிறவர்களுக்குதான் அவர் செவிகொடுக்கிறார். கர்த்தரைத் தேடுவது என்றால் என்ன? அனுதினமும் அல்லது தேவைப்படும்போதெல்லாம் ஒரு பட்டியலை அவரிடம் கொடுத்துவிட்டு, ஆண்டவரே இவையெல்லாம் எனக்கு வேண்டும் என்று சொல்வதுதான் கர்த்தரைத் தேடுவதா? இல்லை. நாம் கர்த்தரை அழைத்து நம் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு நிமிடமும் அவருடைய பிரசன்னத்தை உணர்ந்து அவருடைய விருப்பத்தின்படியும் அவருடைய வழிநடத்துதலின்படியும் வாழ்வதுதான் கர்த்தரைத் தேடி வாழ்வதாகும். Seek God in everything you do. தேடுங்கள், கண்டடைவீர்கள் என்பது உலகப் பொருட்களைக் குறித்த வசனமல்ல. அது கர்த்தரைத் தேடுவதைக் குறித்த வசனம். கர்த்தரை முழு இருதயத்தோடு தேடுகிற ஒருவரும் அவரைக் காணாமல் போனதில்லை.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் என் அருகில் இருக்கும்போது நான் எதைக் குறித்தும் கவலைப் பட வேண்டியதில்லை என்பதை நினைவுபடுத்தியதற்காக நன்றி சுவாமி. ஆமென்.