காலைத் தியானம் – செப்டம்பர் 10, 2021

சங் 14: 1 – 7             

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ?

                            மனிதன் தேவனோடு உறவாடும்படி உருவாக்கப்பட்டவன்.  அனுதினமும் தேவனாகிய கர்த்தரோடு உறவாடிக் கொண்டிருந்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பாவம் செய்தவுடன் கர்த்தரை நோக்கிப் பார்க்க முடியவில்லை. அவர்கள் கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி ஒளித்துக் கொண்டார்கள் என்பதை வேதாகமத்திலே  பார்க்கிறோம் (ஆதி 3: 8-10). கர்த்தரோ அவர்களைத் தேடி வந்தார். இன்றும் நம்முடைய பாவங்கள் நம்மைக் கர்த்தரிடத்திலிருந்து பிரிக்கின்றன. அவரை விட்டு விலகி ஓடச் செய்கின்றன. அவர் நம்மை விட்டு விலகவில்லை. நாம் தான் விலகி ஓடுகிறோம். நம்முடைய பாவ சிந்தனைகளையும் செயல்களையும் தூக்கி எறிந்துவிட்டு அவரைத் தேடி சென்றால், நம்மை அணைத்து ஏற்றுக் கொள்ள அவர் ஆவலோடு காத்திருக்கிறார். ஒவ்வொரு தலைமுறையிலும் ஆண்டவரைத் தேடுகிறவர்கள் சிலர். அவரைப் புறக்கணித்து விலகி செல்பவர்கள் பலர். நீ வசிக்கும் ஊரிலும், வேலை செய்யுமிடத்திலும், நீ படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியிலும் தன்னைத் தேடுகிறவன் உண்டோ என்ற ஏக்கத்துடன் கர்த்தர் பார்த்துக்கொண்டேயிருக்கிறார். நீ அவரை மகிழ்விக்கிறாயா அல்லது வேதனைப் படுத்துகிறாயா?

ஜெபம்:

ஆண்டவரே, உம்மை மகிழ்விக்கவே ஆசைப்படுகிறேன். சாத்தானை விரட்டியடிக்கும் மன உறுதியையும் பெலனையும் எனக்குத் தாரும். ஆமென்.