காலைத் தியானம் – செப்டம்பர் 13, 2021

சங் 17: 1 – 7             

என் காலடிகள் வழுவாதபடிக்கு  

                            பலநாட்களுக்கு முன்பு, தொலைக்காட்சியில் ஒரு விளையாட்டுப் போட்டியைப் பார்த்தேன். மனிதனால் உருவாக்கப்பட்ட தண்ணீர் நிறைந்த குளம் ஒன்றிருந்தது (artificial lake). அந்த குளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை, ஒரு கால் வைக்கக் கூடிய அளவு உள்ள கல் போன்ற அமைப்புகள் பல இருந்தன. போட்டி மிகவும் எளிதான ஒன்றுதான். குளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்குக் கல் போன்ற அமைப்புகளின்மீது கால் வைத்து ஓடிக் கடந்து செல்ல வேண்டும். தண்ணீரில் விழுந்துவிடக் கூடாது. பத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட  அந்த போட்டியில் ஒருவர்தான் வெற்றி பெற்றார். காரணம், கல் போன்ற அமைப்புகளில் சில உறுதியானவை; மற்ற அமைப்புகள் கால் வைத்தவுடன் விலகிவிடும். விலகும் கற்களில் கால் வைத்தவர்கள் அனைவரும் விழுந்துவிட்டார்கள். நம் வாழ்க்கையும் இப்படிப்பட்ட ஒரு போட்டிதான்.  இயேசு கிறிஸ்து அசையாத உறுதியான பாறை. உலகத்தின் சிற்றின்பங்களும், செல்வமும், பதவியும் பாறையைப் போன்ற தோற்றமளித்தாலும், நாம் கால் வைத்தவுடன் விலகி நம்மை விழ வைக்கும் தன்மையுடையவை. உன் கால்கள் வழுவாதபடி கன்மலையைப் பிடித்துக் கொள்.

ஜெபம்:

ஆண்டவரே, என் பாதம் வழுவாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.