காலைத் தியானம் – செப்டம்பர் 17, 2021

சங் 18: 21 – 30             

நான் என் தேவனுக்குத் துரோகம் பண்ணினதில்லை  

                           நாம் நித்திய ஜீவனைப் பெறவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தேவன் தம்முடைய ஒரே குமரனாகிய இயேசு கிறிஸ்துவை இப்பூமிக்கு அனுப்பி கல்வாரியில் பலியாகக் கொடுத்தார். இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நாம் தூய்மையான வாழ்க்கை வாழவேண்டும் என்பது அவருடைய எதிர்பார்ப்பு. ஆகையால் கழுவப்பட்ட நாம் பாவம் செய்வோமேயானால் அது தேவனுக்கு விரோதமாக நாம் செய்யும் துரோகம்.  லூக்கா 15: 11-32 வசனங்களில் சொல்லப்பட்டுள்ள உவமையில், தகப்பனின் சொத்தில் ஒரு பகுதியை அழித்துவிட்டு தன்னிடம் ஒன்றுமில்லாமல், மனந்திரும்பி தகப்பனிடமே திரும்பி வந்த இளைய மகன், தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன் என்று சொல்லுகிறான்.  நாம் தியானித்துவரும் 18ம் சங்கீதத்தை, தாவீது ராஜா பத்சேபாளுடன் தகாத உறவு வைத்துக்கொண்டு உரியாவைக் கொலை செய்வதற்கு முன் எழுதியிருக்கவேண்டும். அந்த சமயத்தில் அவர், தான் தேவனுக்குத் துரோகம் பண்ணினதில்லை என்று சொல்வதைக் கவனியுங்கள். தாவீது ராஜா பத்சேபாள், உரியா காரியத்தில் கொடிய பாவத்தைச் செய்து விட்டு, நாத்தானால் உணர்த்தப்பட்டு, தன்னுடைய பாவத்திற்காக மனஸ்தாபப் பட்டபோது 51ம் சங்கீதத்தை எழுதினானர். அதில் தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்தேன் என்று சொல்லுகிறார்.  துரோகம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்பதைவிட துரோகம் செய்யாமல் இருப்பது நல்லது.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரனாக நடந்துகொள்ள எனக்கு உதவிசெய்யும். ஆமென்.