சங் 18: 41 – 50
கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து . . . சங்கீதம் பாடுவேன்
கர்த்தரையே பற்றிக் கொள்ளும் தாவீது ராஜா உயர்த்தப்படுகிறார். அவருடைய ஜெபங்கள் கேட்கப்படுகின்றன. தாவீது எதிரிகளை முறியடிக்கிறார். பல ஜாதி மக்களும் அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளுகிறார்கள். அவரை அறியாத ஜனங்கள் கூட அவரைச் சேவிக்கிறார்கள். தாவீது ராஜா, நன்றி கர்த்தாவே என்று சொல்லிவிட்டு இருந்துவிடவில்லை. சகல துதிகளையும் மகிமையையும் கர்த்தருக்கே செலுத்துகிறார். அது மாத்திரமல்ல, சகல ஜாதிகளின் மத்தியிலும் கர்த்தருடைய நாமம் மகிமைப் படுகிறது. கர்த்தரிடமிருந்து நீ பெற்றுள்ள அநேக நன்மைகளுக்காக மற்றவர்கள் முன்னிலையில் கர்த்தருடைய நாமம் மகிமைப் படுகின்றதா? அருமையாகப் பாடினாய், மிகவும் பிரயோஜனமுள்ள பிரசங்கம், நன்றாக இதைச் செய்தாய் என்று மக்கள் உன்னைப் பாரட்டும்போது, கர்த்தருக்குச் சேரவேண்டிய மகிமையை நீ எடுத்துக் கொள்ளாதபடி கவனமாயிரு.
ஜெபம்:
ஆண்டவரே, நான் உமது கையிலிருக்கும் கருவி. என் மூலமாக நீர் எதைச் செய்தாலும் மகிமையெல்லாம் உமக்கே உண்டாவதாக. ஆமென்.