காலைத் தியானம் – அக்டோபர் 01, 2021

சங் 26: 1 – 1     

நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்           

                           தாவீது ராஜா இந்த சங்கீதத்தில் தன்னைக் குறித்துக் கூறும் குணாதிசயங்களைப் பாருங்கள். உத்தமத்தில் நடக்கிறேன். வீணரோடே உட்காருவதில்லை. உமது ஆலயத்தை வாஞ்சிக்கிறேன். என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது என்று அடுக்கிக்கொண்டே போகிறார். நீயும் உன்னைக் குறித்து இந்த வார்த்தைகளைக் கூற முடியுமா? நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு காரியமும் உண்டு. தன்னைக் குறித்து இவ்வளவு நம்பிக்கையுடன் பேசும் தாவீது ராஜாவின் வார்த்தைகளில் சிறிதளவுகூட பெருமை காணப்படவில்லை. மாறாக அவர், கர்த்தரையே நம்பியிருக்கிறேன்; அவர் கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது என்று சொல்லி, ஆண்டவர் இல்லாமல் தானில்லை என்ற நிலையை வெளிப்படுத்துகிறார். பெருமை உன்னைக் கீழே தள்ளிவிடாமல் பார்த்துக்கொள்.

ஜெபம்:

ஆண்டவரே, என் படிப்பு, வேலை, பணம் யாவும் நீர் எனக்குக் கொடுத்தவைகள்தான். என்னுடைய நேர்மையான வாழ்க்கை கூட உமது கிருபையின் ஈவு. எதைக் குறித்தும் பெருமைப்படாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.