சங் 27: 7 – 14
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும்
பெற்றோர் பிள்ளைகள் உறவு பாசத்தால் பிணைக்கப்பட்ட ஓர் உறவு. நம் பெற்றோர் நம்மீது வைத்திருக்கும் அன்பை நம்மில் பலரும் அறிவோம். இந்த பொல்லாத உலகில் பணம், சுய நலம், ஏழ்மை, தகாத உறவு போன்ற காரணங்களால் பிள்ளைகளைக் கைவிடும் பெற்றோரும் உண்டு. அப்படிப்பட்ட பிள்ளைகளையும் கர்த்தர் கைவிடமாட்டார். உனக்கு நல்ல பெற்றோர்கள் இருந்தால் அவர்கள் உன்னைக் கைவிடுவது சாத்தியமா? அதற்கு இலட்சத்தில் ஒன்று தான் சாத்தியம் என்று வைத்துக்கொள்வோம். ஆண்டவர் தம்முடைய பிள்ளைகளாகிய நம்மைக் கைவிட அந்த அளவு கூட சாத்தியம் இல்லை என்று வேதம் கூறுகிறது. இன்னொரு விதமாகச் சொல்ல வேண்டுமானால், உன் ஆண்டவருடைய அன்பிற்கு இணையான அன்பு இவ்வுலகில் இல்லை. அது நாம் இந்த பூமியில் அனுபவிக்கும் பெற்றோர் – பிள்ளை அன்பு, கணவன் – மனைவி அன்பு, இவைகள் எல்லாவற்றையும்விட மிகப்பெரியது. நாம் அப்படிப்பட்ட அன்பிற்குப் பாத்திரராக இல்லாத போதிலும், ஆண்டவர் நம்மீது அன்பு செலுத்துகிறார். அப்படிப்பட்ட உன் ஆண்டவரை விடாமல் பிடித்துக்கொள்.
ஜெபம்:
ஆண்டவரே, நிபந்தனையற்ற உம் அன்பிற்கு நன்றி சுவாமி. ஆமென்.