காலைத் தியானம் – அக்டோபர் 12, 2021

சங் 34: 1 – 8      

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்  

                           எம்மதமும் சம்மதம் என்று பலரும் சொல்லும் காலம் இது.  மதத் தீவிரவாதம் பரவலாகக் காணப்படும் இந்நாட்களில், ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்று சொல்வது சரியே. ஆனால் எல்லா தெய்வங்களும் ஒன்றுதான் என்று சொல்வது சரியல்ல. கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை வணங்குகிறார்கள்; இந்துக்கள் சிவன், விஷ்ணு, பிரம்மா போன்று அநேக தெய்வங்களை வணங்குகிறார்கள். இஸ்லாமியர் அல்லாவை வண்ங்குகிறார்கள். இப்படி வணங்கப்படும் எல்லா தெய்வங்களும் ஒன்றுதான் என்று சொல்வது சரியல்ல. எல்லா மதப் போதனைகளும் நற்கிரியைகளைத் தானே வலியுறுத்துகின்றன என்று அதற்குக் காரணம் காட்டுவது ஏற்கமுடியாதது. பரிசுத்த வேதாகமம் ஒரு மதத்தைப் போதிக்கவில்லை. ஒரு இரட்சகரை நமக்குக் காட்டுகிறது. இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறே எந்த தெய்வமும் நம்முடைய மீட்புக்காகத் தம் உயிரைக் கொடுக்கவில்லை. அது மாத்திரமல்ல, மரணத்தை வென்று உயிரோடு எழுந்தவர் வேறே ஒருவருமில்லை. இயேசுவோடு மாத்திரமே நாம் ஒரு உறவு வைத்துக்கொள்ள முடியும். இவற்றையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்கிற நண்பர்களிடம் நான் தயவாய்க் கேட்டுக் கொள்ளுவது இதுதான் – கர்த்தர் நல்லவர்; அவர் ஒருவரே வணங்கப்படத்தக்கவர் என்பதை தயவுசெய்து ருசித்துப் பாருங்கள். Just taste and experience His relationship.  

ஜெபம்:

ஆண்டவரே, நீர் யார் என்பதைப் புரிந்துகொள்ளாத என் உறவினரும் என் நண்பர்களும் கூட உம்மை ருசித்து அறிந்துகொள்ளும்படி அவர்களுக்கும் கிருபை தாரும். ஆமென்.