காலைத் தியானம் – அக்டோபர் 21, 2021

சங் 37: 31- 40      

வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது. அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.   

                           WWJD என்பது What Would Jesus Do என்ற கேள்வியின் சுருக்கம். இந்த சொற்றொடரை 1886ம் வருடத்தில் சார்ல்ஸ் ஷெல்டன் (Rev. Chares Sheldon) என்னும் போதகர் முதலாவதாக உபயோகித்தார்.  மக்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு என்ன செய்வார் என்பதை நினைத்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக அவர் இந்த கேள்வியை தம்முடைய சபை மக்கள் முன்பதாக வைத்தார். மகிழ்ச்சியான நேரம், வருத்தங்கள் நிறைந்த நேரம், முக்கியமான முடிவுகள் எடுக்கவேண்டிய நேரம், சாதாரண முடிவுகள் எடுக்கவேண்டிய நேரம், இப்படி எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், “இப்படிப்பட்ட தருணத்தில் இயேசு கிறிஸ்து என்ன செய்வார்?” என்று உன்னை நீயே கேட்டுத் தெரிந்துகொண்டு, அதன்படி செயல்பட்டால் உன் முடிவுகளில் தவறு இருக்காது. உன் நடைகளில் ஒன்றும் பிசகாது. இயேசு என்ன செய்வார் என்பது தெரியவேண்டுமானால், இயேசுவை உனக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். வேதத்தின் வார்த்தைகள் உன் இருதயத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

ஜெபம்:

ஆண்டவரே, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நான் எதைச் செய்ய விரும்புவீரோ அதையே செய்ய எனக்கு ஞானத்தைத் தாரும். ஆமென்.