காலைத் தியானம் – நவம்பர் 07, 2021

சங் 49: 10 – 20

அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை

                           ஒருவன் பணக்காரனாக இருந்தாலும் சரி அல்லது ஏழையாக இருந்தாலும் சரி, மரிக்கும் போது ஒன்றும் கொண்டுபோவதில்லை.  இது தெரிந்திருந்தும் ஏன் வாழ்க்கை முழுவதையும் பணம், புகழ் முதலியவற்றைத் தேடுவதிலேயே செலவழிக்கிறோம்? இந்த உலகம், நாம் பெற்றிருக்கும் பட்டப் படிப்பு, சம்பாதிக்கும் பணம், வைத்திருக்கும் சொத்து, அடைந்திருக்கும் பதவி ஆகியவைகளையே நம்மை அளக்கும் அளவுகோலாக உபயோகிக்கின்றது. நம்முடைய எண்ணங்களும் இந்த மண்ணுலகைச் சார்ந்தவைகளாகவே இருக்கின்றன. ஆகையால் தான் இந்த உலகம் எவைகளை மதிக்கின்றதோ அவைகளையே நாம் நாடுகிறோம். இவ்வுலகில் ஒருவன் பெறும் புகழ் கூட அவனைப் பின்பற்றி செல்வதில்லை என்று 17ம் வசனம் சொல்லுகிறது. ஆகவே, நீங்களோ நித்திய வாழ்க்கைக்குத் தேவையானவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள் (பிலி 4:8). ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் மெச்சும்படி என் பூலோக வாழ்க்கை இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.