சங் 50: 10 – 23
நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப் போகிறாய்
நீ திருடனைக் கண்டும் காணாதது போல இருந்தால் அவனோடு ஒருமித்துப் போகிறாய் என்றுதான் அர்த்தம். ஒருவன் செய்யும் தவறை அவனுக்குச் சுட்டிக்காட்ட வேண்டியது நம் பொறுப்பு. அநியாயங்கள் நடப்பதைப் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்தால் உன் மீதும் குற்றம் உண்டு. திருச்சபையில் நடக்கும் குழப்பங்களையும் அநியாயங்களையும் தட்டிக் கேட்க வேண்டியது உன் கடமை. சமுதாயத்தில் நடக்கும் முறைகேடுகளைக் குறித்து கேள்வி கேட்க வேண்டியது உன் பொறுப்பு. அது மாத்திரமல்ல, கேள்வி கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் நீ செயல்படவும் வேண்டும். திருச்சபையாக இருந்தாலும் சரி, சமுதாயமாக இருந்தாலும் சரி, செயல்படும் நீதிமான்கள் இல்லாத இடத்தில் அயோக்கியர்களின் ஆட்டம் தொடரும். உன் கடமைகளில் நீ தவறினால், நியாயத்தீர்ப்பு நாளில் அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (வசனம் 21). நீ செய்யும் குற்றங்களுக்காக மாத்திரமல்ல, செய்யாமல் விட்டுவிட்ட நன்மைகளுக்காகவும் கணக்குக் கொடுக்க வேண்டும்.
ஜெபம்:
ஆண்டவரே, அநியாயங்களைத் தட்டிக் கேட்கவும், அவைகளைத் தடுக்கும்படி செயல்படவும் வேண்டிய தைரியத்தை எனக்குத் தாரும். ஆமென்.