காலைத் தியானம் – நவம்பர் 27, 2021

சங் 66: 1 – 7

உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்

                           எகிப்தியருக்கு விரோதமாக தேவன் அனுப்பிய வாதைகளைப் பார்வோன் கண்டான்; அனுபவித்தான். தேவனுடைய வல்லமையைப் பார்த்து பிரமித்துப் போனான்; பயந்தான். இஸ்ரவேல் மக்களை விட்டுவிடுவதாக மோசேயிடம் சொன்னான். ஆனால் விட மனதில்லை. தேவனுடைய வல்லமை பார்வோனை அடிபணிய வைத்தது. ஆனால் பார்வோனின் மனம் மாறவில்லை. ஆண்டவருடைய வல்லமையைக் கண்ட அனைவரும் அவருக்கு அடிபணிந்துவிடுகிறார்கள். அவருடைய வல்லமைக்கு முன் பணியாமல் எப்படி இருக்கமுடியும்? ஆனால் அவருடைய அன்பை ருசித்தவர்கள் மாத்திரமே அவரை நேசிக்க முடியும். அவரைத் “தகப்பனே” என்று அழைக்கமுடியும். இரட்சிப்பைப் பெறமுடியும். ஆண்டவருடைய வல்லமையை மாத்திரம்தான் பார்த்திருக்கிறாயா அல்லது அவருடைய அன்பையும் ருசித்திருக்கிறாயா?                                                                                                        

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய வல்லமையைக் கண்டு பிரமித்துப் போகிறேன். நீர் என்னோடிருக்கும்போது உம்முடைய பிள்ளையாகிய நான் எதைக் குறித்தும் பயப்படவேண்டியதில்லை என்பதால் உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.