காலைத் தியானம் – டிசம்பர் 02, 2021

மத் 1: 7 – 11

சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்          

                           ஆதியாகமம் ஐந்தாம் அதிகாரத்தில் ஆதாமின் வம்ச வரலாறு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஆதாம் முதல் நோவா வரையுள்ள வம்ச வரலாற்றை நாம் பார்க்கிறோம். மத்தேயு முதலாம் அதிகாரத்தில், கடைசி ஆதாம் அல்லது பிந்தின ஆதாம் என்று அழைக்கப்படுகிற இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஆபிரகாம் முதல் இயேசு கிறிஸ்து வரையுள்ள வம்ச வரலாற்றை நாம் பார்க்கிறோம். 1 கொரிந்தியர் 15:45ல், இயேசு கிறிஸ்து பிந்தின ஆதாம் என்று அழைக்கப்படுவது மாத்திரமல்லாமல், அவர் உயிர்ப்பிக்கிற ஆவியானார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. முதலாம் ஆதாம் மூலமாக பாவமும் மரணமும் மனிதருக்குள் வந்தது. பிந்தின ஆதாம் மூலமாக நித்திய ஜீவன் மனிதருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதியாகமம் ஐந்தாம் அதிகாரத்தில் “அவன் மரித்தான்” என்னும் வார்த்தைகள் திரும்ப திரும்ப வருவதைப் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றிலோ மத்தேயுவின் கவனமெல்லாம் நித்திய ஜீவனைக் கொடுக்கும் இயேசுவின் மீது இருந்ததே தவிர, மரணத்தின் மீது இல்லை. கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூர்ந்து அதைக் கொண்டாடும் இந்நாட்களில், நித்திய ஜீவனை நமக்கு வெகுமதியாகக் கொடுத்துள்ள இயேசுவைப் போற்றி புகழுவோமாக!                                       

ஜெபம்:

ஆண்டவரே, நித்திய ஜீவன் எனக்கும் உண்டு என்ற நிச்சயத்தைத்  தந்துள்ளதற்காக உம்மை நன்றியோடு வணங்கித் துதிக்கிறேன். ஆமென்.