காலைத் தியானம் – டிசம்பர் 05, 2021

மத் 2: 1 – 8

அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்                     

                           கிழக்கு திசையிலிருந்து சாஸ்திரிகள் இயேசுவைப் பணிந்துகொள்ள வந்தார்கள். எந்த இடத்திலிருந்து என்பது சொல்லப்படவில்லை. நட்சத்திரத்தைப் பின் தொடர்ந்து வந்ததால் அதிக தூரத்திலிருந்து பயணம் செய்து வந்தார்கள் என்பது தெரிகிறது. ஏரோது ராஜா, தானும் இயேசுவைப் பணிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லுகிறான். ஆனால் அது உண்மையல்ல. அது ஏரோது மூலமாக சாத்தான் செய்த சூழ்ச்சி. மனிதரைப் பாவத்திற்கு நேராக இழுப்பது சாத்தானுடைய குறிக்கோள். மனிதரைப் பாவத்திலிருந்து மீட்கும் குறிக்கோளுடன் இயேசு பூமிக்கு வந்துவிட்டார் என்பது சாத்தானுக்குத் தெரியும். இயேசுவைக் கொன்றுவிட்டால் மனிதருக்கு இரட்சிப்பு இருக்காது என்பது சாத்தானுடைய எண்ணம். சாஸ்திரிகள் பணிந்து கொள்ள வந்தார்கள். ஏரோது ராஜா கொலை செய்ய வகைத் தேடினான். இப்படிப்பட்ட வித்தியாசமான மக்கள் இன்றும் நம் மத்தியில் உண்டு. ஆனால் நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது வேதபாரகரையும் பிரதான ஆசாரியரையும் தான். அவர்களுக்கு கிறிஸ்து எங்கே பிறப்பார் என்பதைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் தெளிவாகவும் துல்லியமாகவும் தெரிந்திருந்தது. வேதாகமத்தைக் கரைத்துக் குடித்திருந்தார்கள். இருந்தும் அவர்கள் இயேசுவைப் பணிந்துகொள்ள செல்லாமல் பின் தங்கிவிட்டார்கள். நமக்கும் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் தெரியும். அவர் வரும்போது பின் தங்கிவிடாதபடி கவனமாயிருப்போம்.                                                                                                                        

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய இரண்டாம் வருகையின் போது அசட்டையாக இருந்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.