மத் 2: 9 – 12
பொன்னையும், தூபவர்க்கத்தையும், வெள்ளைப் போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்
யார் இந்த சாஸ்திரிகள்? அவர்கள் நட்சத்திரங்களையும் வான சாஸ்திரங்களையும் நன்கு அறிந்திருந்த ஞானிகள். அவர்கள் கொண்டுவந்திருந்த காணிக்கைகளை வைத்துப் பார்த்தால் அவர்கள் செல்வந்தர்கள் என்பதும் தெரிகிறது. அவர்கள் கொண்டுவந்திருந்த மூன்று விதமான அதிக விலை மதிப்புள்ள காணிக்கைகள் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர்களை ராஜாக்கள் என்றும், மூன்று ராஜாக்கள் வந்திருந்தார்கள் என்றும் சிலர் நினைக்கிறார்கள். (“We three kings of orient are” என்ற பாடல் நினைவுக்கு வருகிறதல்லவா?) இப்படிப்பட்ட அனுமானத்திற்கு ஆதாரம் இல்லை. அவர்கள் ராஜாக்கள் அல்ல; ஞானிகள். எத்தனை பேர் வந்தார்கள் என்பது சொல்லப்படாவிட்டாலும், அவர்களின் எண்ணிக்கை ஏரோது ராஜாவின் மனதில் ஒரு பெரிய கலக்கத்தை ஏற்படுத்திவிடும் அளவுக்கு இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. கிழக்கிலுள்ள தூர தேசத்திலிருந்து அவர்கள் வந்திருந்தார்கள். ஆகையால் அவர்கள் யூதர்கள் அல்ல. பிள்ளை இருந்த வீட்டிற்குள் பிரவேசித்தார்கள் என்று 11ம் வசனத்தில் சொல்லப்பட்டிருப்பதால், அந்த ஞானிகள் வந்த காலகட்டத்தில் யோசேப்பும், மரியாளும், இயேசுவும் மாட்டுக்கொட்டிலில் இல்லை என்பதும் தெரிகிறது. ஆகையால் நாம் கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் அலங்காரத்துக்காக வைக்கும் மாட்டுக்குடிலில் ஞானிகள் இருப்பது போல காட்டுவதும் தவறுதான். இன்று நமக்கு இரண்டு முக்கிய பாடங்கள். யூதர்களின் மத்தியில் தோன்றிய இயேசு கிறிஸ்து முதலிலிருந்தே யூதர்களுக்கு மட்டும் ராஜா அல்ல. அவர் எப்பொழுதுமே எல்லா தேசத்தாரும் பணிந்துகொள்ள வேண்டிய கர்த்தர். இரண்டாவதாக அவர், ஏழைகளுக்கும் படிப்பறிவில்லாத மேய்ப்பர்களுக்கும் மாத்திரம் தேவனல்ல; ஞானிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் கூட அவரே தேவன்.
ஜெபம்:
ஆண்டவரே, நீர் யாரையும் ஒதுக்கித் தள்ளுவதில்லை என்பதற்காக உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.