காலைத் தியானம் – டிசம்பர் 09, 2021

மத் 3: 7 – 10

விரியன் பாம்புக் குட்டிகளே                   

                                      பரிசேயர், சதுசேயர் ஆகியோர் யூதர்களின் மத வழிபாடுகளில் முக்கிய பங்குபெற்றவர்கள். அவர்களுடைய வாழ்க்கையும் போதனைகளும்  கர்த்தரைப் பிரதிபலிக்கவில்லை. விரியன் பாம்புக் குட்டிகளுக்கு வெளியே பழபழப்பான அழகிய தோற்றமிருந்தாலும் உள்ளே விஷம் இருக்கின்றது. அதேபோல பரிசேயரும் சதுசேயரும் வெளியே பரிசுத்தவான்களைப் போல தோற்றமளித்தாலும் அவர்கள் உள்ளத்தில் சுத்தமில்லை. அவர்கள் யோவான்ஸ்நானனிடத்தில் ஞானஸ்நானம் பெற்று “வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள” நினைத்ததில் தவறு இல்லை. ஆனால் அவர்கள் குறுக்கு வழியைத் தேடினார்கள். மனந்திரும்புதல் இல்லாமல் பரலோகத்துக்குப் போகக் குறுக்கு வழியில்லை. நீ செய்யும் பாவத்தையும் தவறுகளையும் நியாயப்படுத்திக்கொண்டேயிருந்தால், கிறிஸ்துவிடம் உனக்கு இடமிருக்காது. மனந்திரும்புவதுதான் ஆரம்பம். மனந்திரும்புதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை. பாவமன்னிப்பு இல்லாமல் பரிசுத்தம் இல்லை. பரிசுத்தம் இல்லாமல் பரிசுத்தரை நெருங்க வழியில்லை. விரியன் பாம்புக்குட்டிகளோடு இருக்கிறாயா அல்லது இரட்சிக்கப்பட்ட மனிதனாகக் கனிகளைக் கொடுக்கும் மரமாக இருக்கிறாயா?                          

ஜெபம்:

ஆண்டவரே, என்னைப் பாவத்திலிருந்து தூக்கி எடுத்து, என்னை மன்னித்து, கழுவி, புதிய மனிதனாக வாழ உதவி செய்யும். ஆமென்.