காலைத் தியானம் – டிசம்பர் 13, 2021

மத் 4: 8 – 11

இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்         

                                     யார், யாருக்கு, எதைக் கொடுப்பது? வானத்தையும், பூமியையும், ஆகாயவிரிவையும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் உட்பட எல்லாவற்றையும் உருவாக்கிய கர்த்தருக்கே சாத்தான் பூமியைக் கொடுத்துவிடுவானாம். ஒரு கண்ணோட்டத்தில் இது சிரிப்பை வரவழைத்தாலும், சாத்தான் சொல்வதின் அர்த்தத்தை நாம் ஆராய்ந்துபார்க்கவேண்டும். யோவான் 12: 31, 14:30 ஆகிய வசனங்களில் இயேசு சாத்தானை “இந்த உலகத்தின் அதிபதி” என்று சொல்லுகிறார். எபேசியர் 2:2ல் பவுல் அப்போஸ்தலன் சாத்தானை “ஆகாயத்து அதிகாரப் பிரபு” என்று குறிப்பிடுகிறார். சாத்தானுக்கு இந்த பதவியையும் அதிகாரத்தையும் கொடுத்தது யார்? ஆதியாகமம் 1:28ல் கர்த்தர் பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும் மனிதனின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படுத்தினார் என்பதைப் பார்க்கிறோம். மனிதராகிய நாம் (ஆதாம், ஏவாள் மாத்திரமல்ல; நாம் அனைவரும்) பாவத்தைத் தெரிந்துகொண்டு, கர்த்தர் நமக்குக் கொடுத்த அந்த அதிகாரத்தை சாத்தானிடம் கொடுத்துவிட்டோம். சாத்தானை பூமிக்கு அதிபதியாக்கிவிட்டோம். இப்போது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உதவியோடு சாத்தானை நம் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விரட்டியடிப்பது நம்முடைய கடமை.                        

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய வசனமாகிய பட்டயத்தைக் கொண்டு சாத்தானை மேற்கொள்ள எனக்கு உதவிசெய்யும்.   ஆமென்.