காலைத் தியானம் – டிசம்பர் 17, 2021

மத் 5: 4 – 6

துயரப்படுகிறவர்கள் . . . சாந்தகுணமுள்ளவர்கள்       

                                     இந்த உலகில் (பூலோக வாழ்க்கையில்) துன்பம் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடையாது. ஆனால் இயேசுவை அறிந்த ஒருவனுக்கு அவரிடமிருந்து பரிசுத்த ஆவியானவர் மூலமாகக் கிடைக்கும் ஆறுதலை இவ்வுலகில் வேறே யாரும் கொடுக்க முடியாது. இந்த வசனத்தை இன்னொரு விதமாகச் சொல்ல வேண்டுமானால், “துயரப்படுகிற மானிடரே, நீங்கள் என்னையும் (இயேசுவையும்) பரலோகராஜ்யத்தையும் அறியும்போது பாக்கியவான்களாயிருப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் உலகம் தரக்கூடாத ஆறுதலைப் பெற்வீர்கள்” என்று சொல்லலாம். அடுத்த வசனத்தில் இயேசு பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதைப் பற்றி சொல்கிறார். பரலோகராஜ்யத்தின் மனிதராகிய நாம், இந்த நிலையற்ற பூமியை ஏன் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும்? இந்த பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் நம் ஆண்டவர் நாம் அனுபவிக்கவும் ஆளுகை செய்யவும் கொடுத்தார் என்பதை ஆதியாகமம் முதலாம் அதிகாரத்திலேயே பார்க்கிறோம். நாம் தான் பிறருடையவைகளை இச்சித்து இல்லாதவைகளுக்காகக் கவலைப் பட்டு, திருப்தியற்ற வாழ்க்கை வாழ்ந்துவிடுகிறோம். இயேசுவையும் பரலோகராஜ்யத்தையும் அறிந்த சாந்தகுணமுள்ளவனோ, அவனுக்குக் கொடுக்கப்பட்டவைகளைத் திருப்தியுடன் அனுபவித்து சுதந்தரித்துக் கொள்கிறான்.                       

ஜெபம்:

ஆண்டவரே, பூமியில் நீர் கொடுத்திருப்பதை நான் சுதந்தரித்துக் கொள்ளும்படி சாந்த குணத்தையும்  திருப்தியுள்ள மனதையும் எனக்குத் தாரும். ஆமென்.