மத் 5: 17 – 20
பரலோகராஜ்யத்தில் சிறியவன் . . .பெரியவன்
இன்று நமது நாட்டில் பலவிதமான சட்டங்கள் இருக்கின்றன. அத்தனை சட்டங்களும் சட்டமன்றங்களும் இருந்தபோதிலும் ஏன் கோடிக்கணக்கான வழக்குகள் பல ஆண்டுகளாக சட்டமன்றங்களில் தேங்கிக்கிடக்கின்றன? அதற்கு முக்கியக் காரணம், மனிதன் தன் சூழ்நிலைக்கேற்றபடியும், தன் வசதிக்கேற்றபடியும் சட்டத்துக்கு விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறான் என்பதுதான். நியாயப்பிரமாணம் என்பது கர்த்தர் மனிதனுக்குக் கொடுத்திருக்கிற கட்டளைகள். அந்த கட்டளைகளுக்கும் நாம் நம் விருப்பப்படி விளக்கம் கொடுத்துக்கொள்கிறோம். அப்படி விளக்கங்களை சிறிதளவு மாத்திரம் மாற்றுகிறவன் (உலகத்தின் பார்வையில் உத்தமன் என்று கருதப்படுகிறவன்) இரட்சிக்கப்பட்டு பரலோகத்துக்குச் சென்றாலும் அங்கே அவன் சிறியவன் எனப்படுவானாம். இன்றைய வேதபகுதியிலிருந்து இரண்டு பாடங்கள். ஒன்று வேதவசனங்களில் நமக்குப் புரியாதவைகள் அநேகம் உண்டு. அவைகளுக்கு உன் சொந்த விளக்கங்களைக் கொடுக்க முயற்சிக்காதே. ஆண்டவரிடம் கேள். உடனேயே கிடைக்காவிட்டாலும், சரியான நேரத்தில் உனக்கு விளக்கம் கிடைக்கும். இரண்டாவதாக, பரலோக ராஜ்யத்தில் சிறியவன், பெரியவன் என்பதெல்லாம் என்ன என்று நமக்குத் தெரியாது. பரலோகத்தைப் பற்றியும் பரலோகராஜ்யத்தைப் பற்றியும் வேதாகமத்தில் பல காரியங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் சொல்லப்படாதவைகளும், நம் மூளைக்கு எட்டாதவைகளும் ஏராளம் உண்டு. அப்படிப்பட்ட ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் அனுபவிக்க நாம் அங்கு போகும்வரை காத்திருப்போமாக.
ஜெபம்:
ஆண்டவரே, பரலோகத்தில் உம்மை முகமுகமாய்க் காணும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். அதுவரை ஒவ்வொரு நாளும் நீரே என்னை வழிநடத்தும். ஆமென்.