காலைத் தியானம் – டிசம்பர் 23, 2021

மத் 5: 27 – 30

தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று

                                    விபசாரஞ்செய்யாதே என்பது பத்து கற்பனைகளில் ஒன்று. இயேசு கிறிஸ்து மறுபடியும் இந்த கற்பனையை ஒரு உயர்ந்த நிலைக்குக் கொண்டுபோய்விட்டார். ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஒருவரையொருவர் தவறான எண்ணத்தோடு அல்லது இச்சையோடு பார்ப்பதே விபசாரம் செய்வதற்கு சமம் என்று சொல்லுகிறார். தவறான எண்ணமே விபசாரத்திற்கு மூலகாரணம். அது மாத்திரமல்ல, தவறான எண்ணம் உருவாகிறதற்கு உன் பார்வை காரணமாயிருந்தால், அந்தப் பார்வையைத் தருகிற கண்ணைப் பிடுங்கிவிடுவது நலமாயிருக்கும் என்று இயேசு போதிக்கிறார் (மத்தேயு 18:9).  யோபு, தான் இச்சையோடு எந்த ஒரு பெண்ணையும் பார்த்துவிடக்கூடாது என்று தன் கண்களோடே உடன்படிக்கை பண்ணிக் கொண்டானாம் (யோபு 31:1). உன் பரிசுத்த வாழ்க்கைக்குத் தடையாக இருக்கும் (நீ வெளியே வரமுடியாமல் சிக்கித் தவிக்கும்) பாவம் எது? அதற்கு மூல காரணம் என்ன? விளைவைத் தடுக்க வேண்டுமானால், மூல காரணம் தவிர்க்கப்படவேண்டும் என்பதை மறந்துவிடாதே.                    

ஜெபம்:

ஆண்டவரே, என் பரிசுத்த வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் பாவ சிந்தையை உடைத்தெறியும் பெலனை எனக்குத் தாரும். ஆமென்.