காலைத் தியானம் – டிசம்பர் 24, 2021

மத் 5: 31 – 37

சத்தியம் பண்ணவேண்டாம்

                                    நான் சிறுவனாக இருந்தபோது நண்பர்கள் ஒருவருக்கொருவர் சத்தியம் செய்துகொள்வது வழக்கமாயிருந்தது. உன் மீது சத்தியம், என் மீது சத்தியம், என் அம்மா மீது சத்தியம், கடவுள் மீது சத்தியம் என்றெல்லாம் சொல்லி சத்தியம் செய்வார்கள். யார் பெயரைச் சொல்லி சத்தியம் செய்கிறார்களோ அதற்கு நிகராக அவர்கள் சொல்லும் வார்த்தைகளின் தரம் கூடிவிடுவதைப் போன்ற ஒரு எண்ணம் எங்களுக்குள் உருவாகிவிடும்! நீதிமன்றங்களில்கூட பரிசுத்த வேதாகமத்தையோ, பகவத்கீதையையோ அல்லது குரானையோ வைத்து விசாரணைக்கு நிற்பவர்களிடம் சத்தியம் செய்யச் சொல்லிவிட்டால் அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்ற எண்ணம் இருக்கிறதல்லவா? அதுமாத்திரம் உண்மையென்றால் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகளை எளிதில் தீர்த்துவிடலாம்! வானத்தின்மீதும், பூமியின்மீதும், ஒருவன் தலையின்மீதும் சத்தியம்பண்ணும் பழக்கம் அன்றைய யூதர்களிடமும் இருந்தது. இயேசுகிறிஸ்து, ஒருவன் சத்தியம் செய்வதில் எந்தவித அர்த்தமோ அல்லது பிரயோஜனமோ இல்லையென்றும், ஒருவன் சத்தியம் செய்துவிட்டு பொய் சொல்வதால், தேவனுடைய கோபத்துக்குதான் ஆளாகிறான் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். சத்தியம் செய்வதை விட்டுவிட்டு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லதென்றும் சொல்லுங்கள் என்று சொல்லுகிறார். உன் வார்த்தையை எந்நேரத்திலும் எல்லா சூழ்நிலைகளிலும் எல்லாரும் நம்பலாமா?                   

ஜெபம்:

ஆண்டவரே, எப்பொழுதும் உண்மையே பேசும் மன உறுதியை எனக்குத் தாரும். ஆமென்.