மத் 5: 38 – 42
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்
நம்முடைய ஆண்டவர் பழைய ஏற்பாட்டில் மோசேயின் மூலமாகக் கொடுத்த நியாயப்பிரமாணங்களில் பழிக்குப் பழி என்ற கொள்கையைக் கொடுத்துவிட்டு, புதிய ஏற்பாட்டில் ஒரு கன்னத்தில் அடிப்பவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு என்று வேறுவிதமான கொள்கையைக் கொடுக்கிறாரா? ஒரு வேத ஆராய்ச்சியாளர் அதை இவ்வாறாக விளக்குகிறார். மனிதருக்குள் பகை உருவாகவோ அல்லது வளரவோ கூடாது என்பதுதான் ஆண்டவருடைய விருப்பம். பழைய ஏற்பாட்டின் காலத்தில், ஒருவன் தவறு செய்ததின் விளைவாக இன்னொருவன் தன் கண் ஒன்றை இழந்துவிட்டால், தவறு செய்தவனைக் கொன்றுவிடக்கூடாது. அல்லது அவன் செய்த குற்றத்திற்குத் தக்க தண்டனையை விட அதிகமான தண்டனையைக் கொடுத்துவிடக்கூடாது. ஒரு கண்ணை ஒருவன் இழக்க நேரிட்டால், அதிகபட்சமாகக் குற்றம் செய்தவனின் ஒரு கண் எடுக்கப்படலாம் என்பதுதான் அன்று ஏற்படுத்தப்பட்ட கொள்கை. இயேசு அந்த கொள்கையையும் ஒரு மேலான நிலைக்குக் கொண்டுபோய்விடுகிறார். “நியாயம்” விரோதத்தை வளர்த்ததே தவிர சமாதானத்தை உருவாக்கவில்லையென்பதால், நியாயத்தைவிட அன்பும் தாழ்மையுமே சிறந்தது என்பதை இயேசு சுட்டிக் காட்டுகிறார். ஒரு கன்னத்தின் அடிப்பவனுக்கு மறு கன்னத்தையும் காட்டுவதே சமாதானத்தை உருவாக்கும்.
ஜெபம்:
ஆண்டவரே, விட்டுக்கொடுக்கும் மனதை எனக்குத் தாரும். ஆமென்.