காலைத் தியானம் – டிசம்பர் 28, 2021

மத் 6: 1 – 4

உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது          

                                    கணவன் செய்வது மனைவிக்கும், மனைவி செய்வது கணவனுக்கும் தெரியக்கூடாது என்று இங்கு சொல்லப்படவில்லை. சில குடும்பங்களில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் தெரியாமலேயே பணத்தைக் கையாளும் பழக்கம் இருக்கிறது. அது தவறு. இன்று வாசித்த பகுதியில், நாம் பிறருக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு எந்த நோக்கத்தோடு உதவி செய்கிறோம் என்பதில் கவனமாயிருக்க வேண்டும் என்று இயேசு சொல்லுகிறார். ஊழியங்கள் மூலமாகவோ, திருச்சபை மூலமாகவோ அல்லது நேரடியாகவோ உதவிசெய்யும்போது உன்னுடைய குறிக்கோள் என்ன? நான் நல்லவன், பெரியவன், முக்கியமானவன் என்று மற்றவர்கள் நினைக்கவேண்டும் என்பதா? அப்படி நீ விரும்பினால், அந்த ‘பலன்’ உனக்கு நிச்சயமாகக் கிடைக்கும். ஆனால் உன் ஆண்டவர் அதை விரும்பவில்லை என்பதை அறிந்துகொள். மேலும் இது என் கடமை என்று நினைத்து பிறருக்கு உதவி செய்கிறவர்கள் உண்டு. பிரதிபலனை எதிர்பார்த்து உதவி செய்கிறவர்களும் உண்டு. பரிதாபத்தின் அடிப்படையில் உதவி செய்கிறவர்களும் உண்டு. வருமான வரியில் தள்ளுபடி உண்டு என்பதற்காக உதவி செய்கிறவர்களும் உண்டு. உன் உதவி அன்பினால் ஏவப்படவேண்டும் என்பதைத்தான் உன் ஆண்டவர் விரும்புகிறார்.                 

ஜெபம்:

ஆண்டவரே, துன்பத்திலும் ஏழ்மையிலும் வாழும் என் சகோதர சகோதரிகளை நேசிக்கும் உள்ளத்தை எனக்குத் தாரும்.ஆமென்.