காலைத் தியானம் – ஜனவரி 01, 2022

சங் 136: 1 – 26   

கர்த்தரைத் துதியுங்கள்          

                                    இன்று நமக்கு ஒரு புதிய ஆண்டில் அடியெடுத்துவைக்கக் கிருபை தந்திருக்கும் கர்த்தரைத் துதித்துக் கொண்டேயிருக்க வேண்டிய நாள். கர்த்தர் நல்லவர், அவர் கர்த்தாதி கர்த்தர், அதிசயங்களைச் செய்கிறவர், வானங்களையும் பூமியையும் ஞானமாய் உண்டாக்கியவர், சகலத்தையும் படைத்தவர் என்பதற்காக அவரைத் துதிக்கவேண்டும் என்று இந்த சங்கீதக்காரன் சொல்வதை முதல் ஒன்பது வசனங்களில் பார்க்கிறோம். இந்த ஒன்பது வசனங்களும், 23 முதல் 26 வரையுள்ள கடைசி நான்கு வசனங்களும் நம் அனைவருக்கும் பொருந்தும். நாமும் அவற்றிற்காகக் கர்த்தரைத் துதிக்கவேண்டும். 10 முதல் 22 வரையுள்ள (13) வசனங்களில் சொல்லப் பட்டிருப்பவை இஸ்ரவேல் மக்களின் அனுபவங்கள். நமக்கும் பல வருடங்களாகக் கர்த்தருடைய நன்மைகளையும் அதிசயங்களையும் பெற்று மகிழ்ந்த அனுபவங்கள் ஏராளம் உண்டல்லவா? இன்று மற்ற காரியங்களுக்காக எழுந்து ஓடுமுன், ஒரு penஐயும் paperஐயும் எடுத்துக்கொண்டு சற்று நேரம் கர்த்தரோடு தனித்திருந்து உன் வாழ்க்கையில் கர்த்தரிடமிருந்து பெற்ற நன்மைகளை ஒவ்வொன்றாக இந்த 136ம் சங்கீதத்தின் நடையிலேயே எழுது. உதாரணமாக, “என்னையும் என் பிள்ளைகளையும் இரட்சித்துகொண்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது” என்று எழுதலாம். அல்லது “மக்களாட்சியிருக்கும் இந்தியாவில் என்னை வைத்திருப்பவரைத் துதியுங்கள்; அவருடைய கிருபை என்றுமுள்ளது” என்று எழுதலாம். 10 முதல் 22 வரையுள்ள வசனங்களுக்குப் பதிலாக உன் சொந்த அனுபவத்தை எழுதிவிட்டால் உன்னுடைய personalised சங்கீதம் அல்லது துதிப்பாடல் உருவாகிவிடும்.            

ஜெபம்:

ஆண்டவரே, உம்மையும் என் வாழ்க்கையில் நீர் செய்துள்ள நன்மைகளையும் நினைத்துப்பார்க்க இன்று நீர் கொடுத்துள்ள தருணத்திற்காக நன்றி சுவாமி. ஆமென்.