காலைத் தியானம் – ஜனவரி 02, 2022

மத் 6: 16 – 18   

முகவாடலாய் இராதேயுங்கள்        

                                    போலி உதவி, போலி ஜெபம் என்பவற்றைக் குறித்து ஏற்கனவே வாசித்து தியானித்த நாம் இன்று போலி உபவாசத்தைக் குறித்து வாசிக்கிறோம். உபவாசம் என்பது நம் உடலை அழகுப்படுத்துவதற்காக சாப்பாட்டைக் கட்டுப்படுத்துவது அல்ல.  நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் பல ஒழுக்கங்களைப் பின்பற்றுகிறோம் என்று மற்றவர்கள் தெரிந்துகொள்வதற்காகவும் இல்லை. உபவாசத்தின் நோக்கம் என்ன? நாம் காலை எழுந்திருக்கும் நேரம் முதல், இரவு படுக்கைக்குப் போகும் நேரம் வரை நம்முடைய அன்றாட தேவைகளுக்கான நேரத்தை செலவழித்துவிடுகிறோம். அந்த அன்றாட தேவைகளில் முக்கியமான ஒன்று உணவு. உபவாசிப்பதின் மூலமாக நம்முடைய உணவு தேவையை ஒதுக்கிவைத்துவிட்டு ஆண்டவரோடு ஜெபத்தில் நேரத்தை செலவழிக்கின்றோம். நாம் உபவாசிப்பது யாருக்கும் தெரியவேண்டியதில்லை. உன் அந்தரங்கத்தை அறிந்திருக்கிற உன் ஆண்டவருக்கு நீ உபவாசிப்பதும் ஜெபிப்பதும் தெரியும். உபவாசிக்கிறேன் என்று சாப்பிடாமல் இருந்துவிட்டு உன் ஆண்டவரோடு உறவாடவில்லையென்றால், உன் உபவாசத்தினால் எந்த பிரயோஜனமுமில்லை.           

ஜெபம்:

ஆண்டவரே, என் உபவாசம் உமக்குப் பிரியமானதாக இருப்பதாக. ஆமென்.