மத் 6: 24 – 34
தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது
ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்! ஆண்டவர் எதை நம்மால் செய்யமுடியாது என்று சொல்கிறாரோ அதைத்தானே நாம் அனுதினமும் செய்ய முயற்சிக்கிறோம். உலகப்பொருள் நமக்கு ஊழியஞ்செய்ய வேண்டும். நாம் உலகப் பொருளுக்கு ஊழியஞ்செய்யக் கூடாது. ஒரு நாளில் எவ்வளவு நேரம் ஆண்டவரைப் பற்றி நினைக்கிறோம், எவ்வளவு நேரம் உலகப் பொருளைப் பற்றி நினைக்கிறோம் என்பது நாம் யாரைச் சேவிக்கிறோம் என்பதைக் காட்டிவிடும். நாம் உலகப் பொருளைச் சேவிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களைச் சொல்லலாம். ஒன்று பேராசை; இன்னொன்று பயம் அல்லது கவலை. நாளைய தேவைகளுக்கு என்ன செய்வேன் என்ற கவலை. அது தேவையில்லாத கவலை என்பதை இன்று வாசித்த பகுதியில் இயேசு சொல்லியிருப்பதைவிட தெளிவாக யாராலும் சொல்லமுடியாது. உன் ஆண்டவரை மாத்திரம் சேவிக்கவேண்டும் என்பது அவர் கொடுத்திருக்கும் முதல் கற்பனை. அதுதான் பிரதான கற்பனையும் கூட.
ஜெபம்:
ஆண்டவரே, உலகப் பொருளைச் சேவிக்காதபடி என் மனதைக் காத்துக் கொள்ளும். ஆமென்.