காலைத் தியானம் – ஜனவரி 07, 2022

மத் 7: 6 – 8   

பரிசுத்தமானதை . . .  கேளுங்கள் . . . . தேடுங்கள். . . .  தட்டுங்கள்    

                                    உலகமெங்கும் எல்லாவிதமான தருணங்களிலும் உபயோகப்படுத்தப்படும் வேத வசனங்களில் இதுவும் ஒன்று. எதைக் குறித்து இயேசு கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்னார்? தவறான ஒன்றைக் (பாவ செயலைக்) கேட்டால் ஆண்டவர் கொடுப்பாரா? கொடுக்கவே மாட்டார். ஒருவேளை அதை சாத்தான் கொடுக்கலாம்! ஆண்டவருடைய சித்தத்திற்கு அப்பாற்பட்டதை அவர் கொடுப்பாரா? சில சமயங்களில் நம்முடைய பிடிவாதத்தினால் கொடுக்கலாம். இஸ்ரவேல் மக்களுக்கு தம்முடைய விருப்பத்திற்கு மாறாக கர்த்தர் ராஜாவைக் கொடுத்ததை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாடு போய்விடவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால், அவர் சரி என்று சொல்லிவிடலாம். இப்படிப்பட்ட மாப்பிள்ளை அல்லது பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தால், அதையும் கூட ஆண்டவர் கொடுத்துவிடலாம். இன்று வாசித்த வசனங்களில் ஆண்டவர் பரிசுத்தமானவைகளைக் கேட்கவும்  தேடவும் சொல்லுகிறார். உண்மையான கடவுள் யார் என்று முழு இருதயத்தோடு தேடுகிற, கேட்கிற ஒவ்வொருவருக்கும் (அது எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி) இயேசு தம்மை இன்றும் காட்டிக் கொண்டேதான் இருக்கிறார். பரிசுத்தமானவைகளைக் கேளுங்கள். நித்திய வாழ்வுக்கானவைகளைத் தேடுங்கள். ஆண்டவருக்குப் பிரியமானவைகளுக்காகத் தட்டுங்கள்.           

ஜெபம்:

ஆண்டவரே, எதைக் கேட்கவேண்டும், எதைத் தேடவேண்டும், எதற்காகத் தட்ட வேண்டும் என்பதை எனக்கு நினைவுபடுத்தியதற்காக நன்றி. ஆமென்.