காலைத் தியானம் – ஜனவரி 12, 2022

மத் 8: 5 – 13

இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை    

                                    இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் அந்த சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்துவைக் குறித்த தீர்க்கதரிசனப் புத்தகங்கள் இஸ்ரவேலரிடம் இருந்தன. ரோமர்களுக்கு அந்த முன்னறிவிப்பு கிடையாது. அப்படியிருந்தும் நூற்றுக்கதிபதி இயேசுவை அறிந்திருந்தான். நூற்றுக்கதிபதி ஒரு ரோம ராணுவ அதிகாரி. ரோமர் இஸ்ரவேலரை ஆண்டு வந்தார்கள். தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட இஸ்ரவேலரில் ஒருவரான இயேசுவிடம் இப்படிப்பட்ட ஒரு தயவுக்காகப் போய் நிற்பதை நூற்றுக்கதிபதி ஒரு தன்மானப் பிரச்சனையாகக் கருதவில்லை. தன்மானம், பெருமை, அதிகாரம், பணம், மொழி, ஜாதி இப்படி எதையும் தனக்கும் இயேசுவுக்கும் நடுவே அந்த நூற்றுக்கதிபதி வரவிடவில்லை. இயேசுவோடே நெருங்கி வாழாதபடி உனக்கும் இயேசுவுக்கும் நடுவே தடையாக வருவது எது?

ஜெபம்:

ஆண்டவரே, என்னுடைய பணமும் வசதியும் என்னுடைய விசுவாசத்திற்குத் தடையாக இருந்துவிடாதபடி காத்துக் கொள்ளும். ஆமென்.