காலைத் தியானம் – ஜனவரி 28, 2022

மத் 12: 43 – 50

அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக் கண்டு

                                  என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் என்று தாவீது ராஜா சங்கீதம் 51:5ல் கூறுகிறார். ஆதாம், ஏவாள் மூலமாக சாத்தான் மனித உள்ளத்திற்குள் புகுந்துவிட்டான். நாம் பிறக்கும்போதே பாவ சுபாவத்துடன் பிறக்கிறோம். சுயமாக சிந்திக்கும் வயது வந்தவுடன், இயேசு கிறிஸ்துவின் உதவியுடன் மட்டுமே நம்முடைய இருதயம் சுத்தமாகிறது. அப்படி சுத்தம் செய்யப்பட்ட இருதயம் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு ஏதுவான காரியங்களால் நிரப்பப்பட வேண்டும். நம்முடைய இருதயம் காலியாக (சும்மா) இருக்க முடியாத இடம். நீ சாத்தானை விரட்டியடித்துவிட்டாயானால், அது இயேசு கிறிஸ்துவால் நிரப்பப்பட வேண்டும். அல்லது சாத்தான் மறுபடியும் புகுந்துகொள்வான். அநேக விசுவாசிகள், ஆவிக்குரிய வாழ்க்கையில் திடீரென்று பின்னோக்கிப் போய்விடுவதற்கு இதுதான் காரணம். முந்திய நிலையைவிட, பின்னுள்ள நிலை மோசமாக இருக்கும். ஒரு தீய பழக்கத்தை, எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் விடமுடியாமல் தவிக்கிறாயா? தீய பழக்க்கத்தை எடுத்துவிட்டு அந்த காலியான இடத்தை ஒரு நல்ல பழக்கத்தால் நிரப்பு. ஆண்டவர் உனக்கு உதவி செய்வார்.

ஜெபம்:

ஆண்டவரே, என் இருதயத்தில் எந்த ஒரு சிறு பகுதியும் காலியாக இராதபடி நீர் அதை நிரப்பி விடும். ஆமென்.