காலைத் தியானம் – பிப்ரவரி 04, 2022

மத் 15: 1 – 9

அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன்  

                                 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பது என்பது கர்த்தருடைய கற்பனை. கனம் பண்ணுவதென்றால் பெற்றோர்களின் வயதான காலத்திலும் அவர்களை அன்புடனும், மரியாதையுடனும் கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்ட வேண்டியதில்லை. இப்படி அன்புடன் செய்யவேண்டிய கடமையை நிறைவேற்றாதவர்கள், பெற்றோரைக் கவனித்துக் கொள்வதற்காக ஆகக்கூடிய செலவைக் காணிக்கையாகக் கொடுத்துவிட்டால் போதும் என்று வேதபாரகரும் பரிசேயரும் போதித்திருந்தார்கள். பாரம்பரியம் என்ற பெயரில் இந்த பழக்கம் நடைமுறையில் இருந்தது. நடைமுறையில் இருக்கிற பழக்கம் என்று காரணம் காட்டி, உன் பெற்றோரை அன்புடன் உன் வீட்டில் வைத்துக் கொள்வதற்குப் பதிலாக முதியோர் இல்லத்தில் வாழும்படி செய்துவிட்டாயோ? நீ தான் முதியோர் இல்லத்தில் ஆகும் செலவுகளையெல்லாம் கொடுக்கிறாய் என்பதால் உன் குற்றம் குறைந்துவிடாது. அதே சமயம், பிள்ளைகளோடு வாழ விருப்பமில்லாமல், நான் இருக்குமிடத்தில்தான் இருப்பேன் அல்லது முதியோர் இல்லத்தில்தான் இருப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கும் முதியோர்களும் உண்டு. அதுவும் சரியல்ல. கர்த்தர் குடும்பங்களை ஏற்படுத்தியதின் நோக்கத்தை சிந்தித்துப் பாருங்கள்.

ஜெபம்:

ஆண்டவரே, என் பெற்றோரின் மீதுள்ள அன்பு ஒருபோதும் குறைந்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.