காலைத் தியானம் – பிப்ரவரி 07, 2022

மத் 16: 1 – 12

வானத்திலிருந்து ஒரு அடையாளம்

                                 சாத்தான் இயேசுவைச் சோதிக்கும்போது, நீர் தேவனுடைய குமாரனேயானால் இந்த கற்களை அப்பங்களாக்கும் என்று சொன்னான். பரிசேயரும் சதுசேயரும் அவ்விதமாகவே இயேசுவைச் சோதித்தார்கள். நீர் பூமியில் மனிதர்கள் மத்தியில் அநேக அற்புதங்களைச் செய்திருக்கிறீர். இப்பொழுது வானத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவைகளின் நடுவில் ஏதாவது அற்புதம் செய்யும் பார்க்கலாம் என்பது அவர்களுடைய சவால். பரிசேயரும் சதுசேயரும் வேத அறிவில் தேர்ச்சி பெற்றவர்கள். தீர்க்கதரிசன புத்தகங்களையும் மோசேயின் நியாயப்பிரமாண புத்தகங்களையும் கரைத்து குடித்தவர்கள். அப்படியிருந்தும் இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர்கள் முன் வரவில்லை. அவர்கள் பக்தியில் உண்மையில்லை. அவர்களை குறித்து இயேசு, மாயக்காரர் என்றும் புளித்த மாவென்றும் விபசார சந்ததியார் என்றும் சொல்லுகிறார். பரிதாபமான நிலை. எத்தனையோ வருடங்கள் இயேசு கிறிஸ்துவைக் குறித்து கேட்டும் வாசித்தும் வருகிறாய். அவரை அறிவாயா? அல்லது இன்னும் அவரிடத்தில் முழு நம்பிக்கை இல்லை என்று சொல்லி அடையாளங்களையும் அற்புதங்களையும் தேடி அலைகிறாயா?

ஜெபம்:

ஆண்டவரே, அடையாளங்களை அல்ல, கிருபையைத் தேடியே உம்மிடம் வருகிறேன். என் மீது கிருபையாயிரும். ஆமென்.